poems

தற்கொலை
நீண்டதோர் இரவின்
திடுக்கிடும் கணப்பொழுதில்
சடுதியாய் முடிவெடுத்தேன் செத்துப்போவதென.....!

சாகும் மூலங்கள் பற்றி
சிந்திக்க நேரமில்லை..
விடிந்தபின்னால்
தற்கொலை சாத்தியமில்லை

இதோ..
இப்போதே..
சாக வேண்டும்
வாழ்வின் கடைசி நுனிவரை
தித்திப்பேயில்லை என்றானபின்
வாழ்ந்தென்ன...! வீழ்ந்தென்ன..!

தூக்கமாத்திரைகள்..!?
வேண்டாம்
சிலவேளை உயிர்பிழைத்துவிடுவேன்..

தூக்குக்கயிறு..!?
ஐயோ...
துடிதுடித்துப்போவேன்..

தீக்குளிக்கலாமா..!?
ம்ஹீம்..
கர்ணகொடூரம்..

தண்டவாளம்..!?
எங்களுரில் எந்த நேரம் ரயில் வருமோ..
யாருக்கும் தெரியாது..

நஞ்சு..!?
தினந்தோறும் மனைவி கையால்
அதைத்தானே சாப்பிடுகிறேன்..

முடிவெடுக்கத்தெரிந்த எனக்கு
முயற்சிக்கத்துணிவில்லை..
தீமைகள் வழியும் உலகில்
கண்மூடி வாழவும் சம்மதமில்லை..

துயர்துடைக்கும் வழிமூலம்
சாவதொன்றே என்றால்
எல்லோரும் இங்கு சடலங்களே...

நான் மட்டும் சாவதனால்
தழைத்தோங்குமா சமுதாயம்..?
சிந்திக்கிறேன்..
சிந்திக்கிறேன்..
இன்னுமின்னும்
சிந்திக்கிறேன்..

நீண்டதோர் இரவின்
விடிதலுக்குப்பின்னராய்
தாமதமாய்ப்புரிந்து கொண்டேன்..
தற்கொலை அத்துணை எளிதில்லை என்பதை...!

Leia mais...